தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் இப்படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பூமி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர், ஜோர்த்தாலே மற்றும் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (14.04.2023) வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை முன்னிட்டு பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். இதில் சூப்பர் சிங்கர் பிரபல பாடகி சிறுமி ரிஹானா வருகை தந்தார். ஆரவாரத்துடன் வந்த அவர் காஞ்சனா கோவை சரளான் போல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் கொங்கு தமிழில் பேசினார்.
அதன் பின்னர் லாரன்ஸிடம், “ஏன் ராகவா? பேய் படத்தை நீங்கள் விடவே மாட்டீர்களா? உண்மையில் பேய் இருக்கிறதா? நீங்கள் நம்புகிறீர்களா? பேய்க்கு நீங்கள் பயப்படுவீர்களா?” என்றெல்லாம் கேட்டார். அதற்கு ராகவா லாரன்ஸ், “சிறிய வயதில் பேய் கதை நிறைய அம்மா சொல்லி இருக்கிறார். அதனால் பிறந்த நம்பிக்கைகள் அவை. அப்போதே பயம் கொண்டு அம்மாவை நான் ஒன்னுக்கு போகும்போதெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறேன். அதைத்தான் அப்படியே படத்திலும் காட்சியாக வைத்தேன்” என்று கலகலப்பாக கூறினார்.