நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மக்கள் மன்றம் மூலம் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இன்று சென்னையில் அமைந்துள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நமக்கு கிடைத்த தகவலில், ''ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் அவரிடம் வலியுறுத்தியதாக' கூறப்படுகிறது.
மேலும் ரஜினிகாந்த் தனது உடல்நிலை குறித்தும் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்ததாகவும், தொடர்ந்து ஆர்வமாக மக்கள் பணிகளில் ஈடுபடவும் அவர் கூறியுள்ளார்.
இன்று மாலை அல்லது நாளை, தனது அரசியல் வருகை பற்றி ரஜினி அறிவிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது வந்த தகவலின்படி, ''பேருக்கு கட்சி தொடங்கி, 10 - 15% வாக்குகள் பெற்று, தோல்வி அடைய விரும்பவில்லை. தேர்தல் களத்தில் நின்றால் வெற்றிப்பெற வேண்டும்'' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் உரை எமோஷனலாக இருந்ததாகவும், நிர்வாகிகள் சிலர் கண்ணீர் விட்டதாகவும் கூறப்படுகிறது.