பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உயிரிழந்திருப்பது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி., ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எஸ்.பி.பி. காதல், சோகம், கோபம் என மனித உணர்வுகளை தனது குரலால் வடித்த சிற்பி அவர். எஸ்.பி.பி-யின் குரலுக்கும் பாடலுக்கும் அடிமையாகதவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இசையுலகில் தனித்த சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த இந்த பாடும் நிலா., பாடுவதில் மட்டுமல்ல, நடிப்பிலும் பிரகாசிக்க தவறவில்லை. அதற்கு அவர் நடித்த வெகு சில படங்களே போதும்., எஸ்.பி.பியின் நடிப்பு எவ்வளவு நேர்த்தியானது என்று சொல்லிவிடும்.
எஸ்.பி.பி-யின் நடிப்பின் தொடக்கத்தில், அவருக்கு பெரும் பெயரை கொடுத்த திரைப்படம் வசந்த் இயக்கிய கேளடி கண்மணி. எஸ்.பி.பி பாடகராக மிக பிசியாக இருந்த காலக்கட்டத்தில், அவர் நடித்து கொடுத்த திரைப்படம் இது. மனைவியை இழந்த கணவனாகவும், மகளின் மீது பெரும் பாசம் கொண்ட அப்பாவாகவும் ஏ.ஆர்.ஆர் கதாபாத்திரத்துக்கு ஆழமான நடிப்பை கொடுத்த எஸ்.பி.பி., கடற்கரை மணற்பரப்பில் கையில் பேப்பருடன் முத்துமணி ரத்தினங்களும் என ஆரம்பிப்பது காலங்கள் கடந்தும் ரசிகர்களுக்கு ஆல்-டைம் ஃபேவரைட்.
அடுத்தது திருடா திருடா. கொஞ்சம் உப்பலான உருவம் கொண்ட ஒரு சி.பி.ஐ ஆபிசர் வேடத்தில், நெற்றியில் சந்தனமாக எஸ்.பி.பி காட்டிய சட்டிலான நடிப்பு., பக்கா Class Performance என்று அடித்து சொல்வார்கள். அதே போல காதலன் படத்தில் பாசமான அப்பாவாக அவர் காட்டிய நடிப்பு, அன்றைய இளைஞர்களிடையே அவரை Dream Daddy-ஆக கொண்டு சேர்த்தது. மகன் காதலில் தோல்வியுற்று, அப்பாவின் மடியில் கிடக்கும் பொழுது., அரை பீரை குடித்துவிட்டு., ஞாயிறு என்பது பெண்ணாக என எஸ்.பி.பி பாடுவது., ஆயிரம் தாலாட்டுகளுக்கு சமம்தான்.
அதே போல உல்லாசம் படத்தில் எஸ்.பி.பி இன்னொரு வித்தியாசமான பரினாமத்தை கொடுத்திருப்பார். அடங்காத மகனை கண்டு விரக்தியோடு பயணித்தபடி. பஸ் ட்ரைவராக விக்ரமுடன் சேர்ந்த ரகளை செய்திருப்பார். அதே நேரத்தில் காதல் தேசம் படத்தில் தபுவின் அப்பாவாக, செம் கூல் ஃபாதராக பர்ஃபார்மன்ஸ் காட்டி அசத்தியிருப்பார் எஸ்.பி.பி. இன்னும் ரட்சகன் தொடங்கி., விஜய்க்கு அப்பாவாக பிரியமானவளே வரை., எஸ்.பி.பியின் நடிப்பு ஒருநாளும் ரசிகர்கள் கவர தவறியதே இல்லை. அவ்வை ஷண்முகியில் வரும் ஒற்றை காட்சியில் கூட, ஆயிரம் வாலா சவரெடியாக வெடித்திருப்பார் மனிதர்.
பாடகர் என்பதை தாண்டி., நடிகராக, இசையமைப்பாளராக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக, தயாரிப்பாளராக, கலையின் மூலம் மக்களை ஒவ்வொரு நொடியிலும் மகிழ்விக்க நினைத்த கலைஞன்., இப்போது இயற்கை எய்திருப்பது இசைத்துறைக்கு மட்டுமல்ல., கலைத்துறைக்கே பெரும் இழப்புதான். காலமும் கலையும் உள்ள வரை எஸ்.பி.பி கொண்டாடப்பட்டு கொண்டேதான் இருப்பார்.