நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு குறித்து அவரது நண்பர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கை போ ச்சே, பி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடித்த சிச்சோரே திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டது, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சுஷாந்த்தின் நண்பரான டாக்டர் கிரண் ஜானி என்பவர், சுஷாந்த் சிங் குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ''இந்த துயரமான நேரத்தில் சுஷாந்த்தின் இன்னொரு பக்கத்தை சொல்கிறேன். அவருக்கு நிறைய புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை படிப்பார். தனது வீட்டு பால்கனியில் ஒரு டெலஸ்கோப் கூட வைத்திருந்தார். மற்ற நடிகர்களின் இன்ஸ்டாகிராமில் அவர்களது போட்டோஷூட் புகைப்படங்கள் நிறைந்திருக்க, சுஷாந்த்தின் இன்ஸ்டாகிராம் அறிவியல் சம்பந்தமான பதிவுகளால் நிறைந்திருக்கும்.
நானும் அவரும் மணிக்கணக்கில் அறிவியல் சார்ந்து பேசி கொண்டிருப்போம். ஒரு ஆராய்ச்சி பல்கலைகழகத்தில் பேசப்படுவது போல இருக்கும், அவருடன் பேசுவது. ஒரு பக்கம் பல ரசிகர்களை கொண்ட பாலிவுட் நட்சத்திரமாகவும், இன்னொரு பக்கம் உலகத்தின் அர்த்தத்தை தேடுபவராகவும் இருந்தார் சுஷாந்த். நாங்கள் கடைசியாக பேசும் பொழுது, ஒரு Future Spacetime பற்றி பேசினோம். கண்டிப்பாக அப்படிதான் நாங்கள் சந்திக்க போகிறோம்'' என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Sushant - seeker, actor pic.twitter.com/Ro1SqIQjKd
— Dr. Karan Jani (@AstroKPJ) June 14, 2020