சுமார் 50 வருடங்களால் தனது குரலால் மக்களை தாலாட்டிக் கொண்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது மறைவு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என்பதை அவர்களது சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே உணர முடியும்.
பிரபலங்கள் பலரும் வீடியோ மூலம் எஸ்பிபியின் மறைவு குறித்த வேதனையை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், இசை உலகத்துக்கு பேரிழப்பு. இப்படி ஒரு பேச்சுக்கு சொல்லலாமே தவிர, உண்மையாவே வார்த்தைகள் இல்லை.
நமக்கு நெருங்கிய, அல்லது நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துட்டா என்ன ஒரு உணர்வு இருக்குமோ அப்படித் தான் இருக்கு. அவர் சிறந்த மேதை என்பதனால் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த மனிதராகவும் இருந்ததுனால மட்டும் தான் அப்படி ஒரு உணர்வு.
தெலுங்கு அவருக்கு தாய்மொழியாக இருந்தாலும் தமிழ் மேல் மிகுந்த பற்று வைத்திருந்தார். 'தெனாலி' படத்தின் போது ஏ.ஆர்.ரஹ்மானும் இசைக்கூடத்தில் இருந்தோம். அப்போது அவர் கண்ணாடி.... (கண்ணாடி என்றதும் இப்போ அவர் கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குறது நியாபகம் வந்துடுச்சு. இது ஒரு கனவா இருக்கக்கூடாதா ? என்று கண்கலங்கினார். ) பாடல் குறித்து இந்த வரிகளை இன்னும் அழுத்தமாக பாட முடியுமா என்று கேட்ட போது, 'ரவிக்குமார் சார் உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி பாடிக் கொடுத்துடுறேன்' என்றார்.
பின்னர் அந்த பாடலை சாதனா சர்கம் பாடும் போது 'சுவாசமே' என்ற இடத்தில் 'சாசமே' என்று பாடுவார். அதனை சுட்டிக்காட்டி என்னிடம் கேட்டிங்க, இப்போ அவங்க கிட்ட கேட்க மாட்டிங்களா? என்று அவர் கேட்க, அதற்கு ரஹ்மான் சார், நிறைய இடங்களில் அவர் சுவாஸமேனு பாடி இருக்காங்க. அதனை அங்கு மாற்றிவிடுவோம் என்றார். அந்த அளவுக்கு அவர் தமிழ் மேல் பற்று கொண்டுள்ளார்.