நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி வந்தார்.
முன்னதாக சீசன் 4, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதருக்காக புது பிராண்ட் ஒன்றைத் துவங்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்றபோது இந்த ஐடியா தோன்றியதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், KH - House of Khaddar என தன் நிறுவனத்தின் பிராண்ட் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், நவம்பர் 15 அன்று, சிகாகோவில் தனது ஃபேஷன் நிறுவனமான ‘KH ஹவுஸ் ஆஃப் கதர்’, நிறுவனத்தை பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிமுகப் படுத்தியுள்ளார். ‘KH memoir’ வாசனை திரவியம் வழங்கப்பட்டு நடந்த, இந்த நிகழ்வின் வெளியீட்டின்போது நடந்த விற்பனையில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை, தமது ஆதரவுபெற்ற Pivoting in Heels எனும் லாபநோக்கமற்ற அமைப்புக்கு கமல்ஹாசன் நன்கொடையாக வழங்கினார். அடுத்த இரண்டு வாரங்களில் www.khhk.in -இல் தயாரிப்பு பொருட்கள் பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்படத் தொடங்கப்படும்.
கமல்ஹாசனின் இந்த ஹவுஸ் ஆஃப் கதரின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ஒரு திறமான கதராடை நிறுவனத்தை உருவாக்குவதாகும். தேசத்தின் இளைஞர்களைக் கவரும் வகையில் புதுவித பாணியான, குளிர்ச்சியான மற்றும் நவீன துணியைக் காட்சிப்படுத்துவதை ஹவுஸ் ஆஃப் கதர் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே பெரும்பாலான மக்களின் மனதில் காதி ஆடைகள் குறித்த பொது பிம்பம் சிதைந்து போகிறது. இந்தியாவில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் இந்த லேபிள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பிராண்டைப் பற்றி, 'KH ஹவுஸ் ஆஃப் கதர்' வடிவமைப்பாளர் அம்ரிதா ராம் கூறுகையில், “ஒவ்வொரு வடிவமைப்பாளரும் கொண்டிருக்கும் பெரிய ஃபேஷன் கனவின் ஒரு பகுதியை சாத்தியப்படுத்தும், அவர்களின் உழைப்பை கவுரவப்படுத்தும் இந்த வாய்ப்பு திரு. கமல்ஹாசனிடமிருந்து வழங்கப்பெற்றது. இந்த தயாரிப்பு, தன்னைத்தானே சந்தைப்படுத்திக்கொள்ளும் திறனுடையது என்று‘பாஸ்’ (கமல்ஹாசன்) நம்புகிறார். இதனை ஒன்றிணைப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில், மக்களால் தயாரிக்கப்படும் எமது கதர் தயாரிப்புகள், ஃபேஷன் டெமாகிரேஸிக்கு உறுதுணையாக இருப்பதில், மிகப்பெரிய மகிழ்ச்சி. இன்றைய சூழலில், இதுசார்ந்த உரையாடல்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. எங்கள் பிராண்டின் இந்த நோக்கத்தை, மக்கள் புரிந்துகொள்ள விரும்புகிறோம். தற்போதைய காலக்கட்டத்தில், ஒரு டிசைனருக்கு, தயாரிப்புகளின் நிலைத்தன்மை(Sustainability) குறித்த விழிப்புணர்வு அவசியம். அது ஒரு டிசைனரின் பொறுப்பும் கூட. மேலும் நம் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ளும்போது, உலகின் நிலைத்தன்மையும் நீடிக்கும்.” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக, சிகாகோவில் தனது முதல் பேஷன் லைனைத் தொடங்கிவைத்த கமல்ஹாசன், "சிகாகோ ஒரு சிறப்புமிக்க வரலாறு கொண்ட நகரம். இங்குள்ள தேசிய கலாச்சாரம் தன்னைத்தானே பேசுகிறது. எங்கள் பிராண்டுகளை காட்சிப்படுத்த சரியான நகரம் தேவை. வட அமெரிக்காவில் வேறு எங்கும் இல்லாத அளவில், இங்குள்ள மக்கள் நறுமணம் மற்றும் ஆடை இரண்டையும் அதிகம் புரிந்துகொள்கிறார்கள்." என்று கூறினார்.
KH பிராண்ட் லைனை அங்கீகரிக்க எந்த பிரபலம் அல்லது விளையாட்டு வீரருடன் ஒத்துழைப்பது பற்றி கேட்டபோது, பதில் கூறிய கமல், "பிரபலம் அல்லது விளையாட்டு வீரர் எங்கள் பார்வையைப் பகிர்ந்துகொண்டு, பிராண்ட் தரத்தை பராமரிக்க முடிந்தால் நாங்கள் அவர்களை கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் சரியான நபர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
Our weavers chance to loom large. Dear West, follow the thread it will reach you to our history. Bravo khaddar says KHHK !! https://t.co/qrxpSE72Yq#KHHouseofKhaddar #BravoKhaddar pic.twitter.com/jMSNv6jR3W
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2021
இதனைத் தொர்ந்து ஹவுஸ் ஆஃப் கதரின் விதவிதமான ஆடைகளை கமல்ஹாசன் மற்றும் பல மாடல் கலைஞர்கள் அணிந்து வரும் முன்னோட்ட வீடியோ வெளியானது. பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதுடன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.