கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யஷ் மாறியுள்ளார்.
சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படம் கடந்தாண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.
தமிழ் நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப் -2 படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் நடிகர் யஷ், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்," அன்பான ரசிகர்களுக்கு வணக்கம்... உங்களது மாசற்ற அன்பு, ஈடு இணையற்ற அபிமானம், என் இதயத்தை நிறைக்கிறது... நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் .
சமீப வருடங்களில் எனது பிறந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று உணர ஆரம்பித்தேன். இப்பொழுது என் பிறந்த நாளை உங்களது நாளாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளீர்கள்.
இந்த வருஷம் என் பிறந்தநாளில் உங்களை பார்க்கணும் என்று ஆசை.. உங்களோடு நேரத்தைக் கழிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை.
உங்களுக்கு மிகச் சிறந்த ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று சிரத்தையுடன் உழைக்கிறேன்.. உங்களை சந்திக்கும் போது, அந்த செய்தியையும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதுவரை உங்கள் பொறுமையும் அன்பும் தான் இந்த ஆண்டு எனக்கு உங்களின் பிறந்தநாள் பரிசு.
இந்த ஆண்டு பிறந்தநாளில் உங்களுடன் இருக்க முடியாது, ஆனால் கூடிய விரைவில் உங்களை சந்திப்பேன். உங்கள் காத்திருப்புக்கு மதிப்புள்ளது. அன்புடன் யாஷ்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.