போபால்: காஷ்மீர் பைஃல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ஹரியானா மற்றும் குஜராத் மாநில அரசுகள் வரி விலக்கை அளித்தன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளது. “90-களில் காஷ்மீரை சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுத்துள்ளோம்” என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.