சென்னை: தமிழ்த் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன் (Karthick Naren). இந்த படம் மூலம் இயக்குநர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.
அதன்பிறகு அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை இயக்கினார். அடுத்ததாக அரவிந்த் சுவாமியை வைத்து நரகாசுரன் படத்தை இயக்கினார். இந்தபடம் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே கார்த்திக் நரேன் அரவிந்த் சுவாமி மற்றும் பிரசன்னா நடிப்பில் ‘புரோஜக்ட் அக்னி’ எனும் திரைப்படத்தை, ‘நவரசா’ ஆந்தாலஜி தொகுப்புக்காக இயக்கினார்.
இதனிடையே தனுஷை வைத்து மாறன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை தற்போது (டிசம்பர் 10,2021) நடந்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 20-ஆம் தேதி தொடங்குவதாகவும், மொத்தம் 40 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், ஹீரோயின் உள்பட இதர விஷயங்கள் விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதனிடையே இந்த டிசம்பரில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப்போகாதே’ மற்றும் ‘குருதி ஆட்டம்’ திரைப்படங்கள் 2 வார இடைவெளிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.