தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. சமீபத்தில், 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' உள்ளிட்ட படங்கள் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகியும் இருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இதற்கு அடுத்தபடியாக தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். குக்கூ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜூ முருகன், ஜோக்கர் திரைப்படத்தை இரண்டாவதாக இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் அதிக அளவு பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம், தேசிய விருதையும் வென்றிருந்தது. ஜோக்கர் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவை வைத்து 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தையும் ராஜு முருகன் இயக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தையும் ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.
ஜப்பான் படத்தை தொடர்ந்து, கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாகமும், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. அதே போல, 96 படத்தை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்திலும் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
பல இயக்குனர்களுடன் இணைந்து புதுமையான அம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி, பலரின் பேவரைட் நடிகராகவும் உள்ளார். இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். 29 வயதே ஆகும் இவர், கார்த்தியின் ரசிகராக இருந்து வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு வினோத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 15 நாட்களுக்கு முன்பாக வினோத் உயிரிழந்திருந்த சூழலில், ஷூட்டிங் முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்த கார்த்தி, வினோத்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.