பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 19, 2020-ம் ஆண்டு மத்திய அரசு, மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது.
இந்த மசோதாக்கள், விவசாயிகளின் வேளாண்மைக்கு உதவும் விளைபொருட்களை வாங்கவும், விற்கவும் உதவும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். அத்துடன் இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் இன்று(19/11/2021), இந்த மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் இதுபற்றி குளிர்கால கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021
இந்நிலையில், நடிகர் கார்த்தி தமது ட்விட்டர் பதிவில், “மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் விவசாயம் செய்வதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்தார், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் கார்த்தியின் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.