ஆரம்பத்தில் கலகலப்பு உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஜிம் பாய் கேரக்டரில் வந்த யோகி பாபு ஓரிரு வசனங்கள் பேசி காமெடி கதாபாத்திரங்களில் கவனிக்க வைக்கும் நடிப்பை தந்து வந்தார்.
கலகலப்பு படத்திற்கு பிறகு யோகிபாபு நல்ல ஒரு காமெடியனாகவே அறியப்பட்டார். அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபு நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதவராகவும், இயக்குநர்களின் சாய்ஸில் முதன்மையான இடத்தையும் பிடித்த யோகிபாபு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவை பின்தொடர்ந்து காதல் செய்யும் வாலிபராக வருவார். அந்த படத்தில் யோகி பாபுக்கென்று தனிப்பாடலே இருக்கும். அந்த பாடலின் மூலம் இன்னும் நன்றாகவே யோகி பாபு பிரபலமானார்.
தொடர்ந்து கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இந்தநிலையில் அண்மையில் மடோனி அஸ்வின் இயக்கத்தில் உருவாகி விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸான மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கிறார். யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக யோகிபாபுவின் கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது.
இதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கிற கர்ணன் திரைப்படத்திலும் யோகிபாபு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுல்தான் திரைப்படத்திலும் யோகிபாபு காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படி ஹீரோ, குணச்சித்திர வேடம், காமெடியன் என பல வேடங்களில் யோகி பாபு நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு, ரசிகர்கள் பலரும் அவரைத் தொடர்ந்து பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தும் வருகின்றனர்.