தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தின் 'கண்டா வர சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'உட்றாதீங்க யப்போ' போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முன்னதாக கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இதனிடையே தேர்தல் தேதிகள் மாற்றி வைக்கப்பட்டதாலும், ஊரடங்கு கடைபிடிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருவதாலும் ஒருவேளை கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் கர்ணன் திரைப்படம் ரிலீசானது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தைப் பார்த்த நடிகரும் திமுக உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது " ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja ,அண்ணன் @theVcreations, இயக்குநர் @mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்."
"1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேசியதைத் தொடர்ந்து படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு 90-களின் பிற்பகுதியில் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.