கன்னட திரை உலகில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்து வந்தவர் சௌஜன்யா. இவர் பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தம்முடைய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இவருடைய குடியிருப்பில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் இவர் தம்முடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவருடைய காலில் பச்சை குத்தி இருந்ததையும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் சௌஜன்யா தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருந்தாரா? என்று கண்டு பிடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதேபோல் சௌஜன்யாவின் குடும்பத்தினரிடமும் சக ஊழியர்கள் மற்றும் நட்பு வட்டாரத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவை தவிர ஒரு மரணக்குறிப்பையும் சௌஜன்யா விட்டுச் சென்றிருக்கிறார். அதில் தன்னுடைய முடிவுக்கு யாரும் காரணம் அல்ல; தான் யாரையும் குற்றம் சாட்டவில்லை; தன்னுடைய தற்கொலைக்கு தான் மட்டுமே பொறுப்பு என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பெற்றோரிடம் அந்தக் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கும் சௌஜன்யா, உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் வாழ்க்கையில் தான் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனக்கு உதவிய அனைவருக்கும் அதில் நன்றி தெரிவித்தும் உள்ளார். இறப்பு தருணத்தில் கூட தனக்கு உதவி செய்தவர்களை நினைத்து பார்த்து நன்றி தெரிவித்துள்ள சௌஜன்யாவுக்கு அப்படி என்ன கஷ்டம்? யாரால் கஷ்டம்? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வோ, முடிவோ அல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வது நமக்கும் நம் சார்ந்தவர்க்கும் பேரிழப்பு. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.