நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சை ட்வீட்டும் அதற்கு நடிகை ஒருவரின் கமெண்ட்டும் வைரலாகி வருகிறது.
கங்கனா ரனாவத் தமது பதிவில், இந்தியாவில் இப்போது மக்கள் இறந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதன் மக்கள் தொகை தான் என்றும் 130 கோடி இந்திய மக்கள் தொகையில் சட்டவிரோதமாக 25 கோடி பேராவது குடியேறியிருப்பார்கள் என்றும், அதே சமயம் அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி தான் என்றும் ஆனாலும் இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் 3 மடங்கு அமெரிக்கா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவின் முடிவில், 3-வது குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் பிறப்பிக்க வேண்டும் என்று கங்கனா அதிரடியாகக் கூறியுள்ளார். இந்த கருத்தை பற்றி வலைப்பக்கங்களில் பலரும் பேசி வருகின்றனர். இதனிடையே பிரபல காமெடி நடிகை சலோனி கவுர், கங்கனாவின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்து, கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் கூகுள் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து சுட்டிக்காட்டி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பதில் அளித்த கங்கனா, “தாத்தாக்கள் காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை கூடத்தான் பெற்றுக் கொண்டார்கள். ஆக அப்போது இருந்தது போல இப்போதும் வாழ முடியாது அல்லவா? மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் இங்கும் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடித்த ஜெயலலிதாவின் பயோபிக் விரைவில் முதலில் திரையரங்கிலும் பின்னர் ஓடிடியிலும் வெளியாகும் என கங்கனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த படம் 2021 ஏப்ரல் 23 வெளியாகவிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.