இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதையில் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் பணிபுரிந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கங்கணா ரணாவத்தின் பிறந்த நாளான இன்று (மார்ச் 23) 'தலைவி' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய கங்கணா ரணாவத், “இது எனக்கு விஷேசமான நாள். இன்று என் 34-வது பிறந்த நாள். நான் பிறந்ததற்கே பெருமையாக கருதுகிறேன். விஜயேந்திர பிரசாத் சார் இந்த 'தலைவி' படத்துக்கு என்னைப் பரிந்துரைக்காமல் இருந்திருந்தால் இந்தப் பயணமே இல்லை. எப்போதும் என்னைப் படத்திலிருந்து வெளியேற்றுவதற்கு தான் பரிந்துரைப்பார்கள்.
எனக்கு அரசியல் என்பது பயம் தரக்கூடிய ஒன்று. தமிழ்நாட்டு அரசியல் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் என்னால் முடியும் என்று அவர் நம்பிக்கை அளித்து தேர்வு செய்தார். பெரும்பாலான நடிகர்கள் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க தயாராக இல்லை. அந்த வகையில் இப்படத்தில் என்னுடன் நடிக்க அரவிந்த்சாமி சம்மதித்தார். அவருக்கு நன்றிகள். தென்னிந்திய சினிமாவில், வாரிசு அரசியல், குழு மனப்பான்மை, குரூப்பிசம், கேங்கிசம் என எதுவும் இல்லை.
வெளியிலிருந்து வருவோர்களை ஒதுக்காமல் ஆதரித்து ஏற்கின்றனர். நான் இங்கு நிறைய படங்களை பண்ண விரும்புகிறேன். என் திறமைகள் குறித்து சந்தேகம் கொள்ளாத ஒரு நபர் இயக்குநர் விஜய் சார். இயக்குநராக நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டது, ஒரு நடிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதைத்தான்” என்று உருக்கமாகவும் சில இடங்களில் கண்கலங்கியும் பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி மேற்கண்ட மொழிகளில் வெளியாகிறது.