நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். பிரபல தமிழ் திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பன்முகங்கள் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவர் திரும்பி வந்தபோது அவருக்கு லேசான இருமல் இருந்த காரணத்தால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தம்முடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் கமல்ஹாசன், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.”என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அண்மையில் கனமழை சூழலில் சென்னையில் மக்களை நேரடியாக சென்று பார்த்து நடிகர் கமல்ஹாசன் நிவாரணங்களை வழங்கி நம்பிக்கை கொடுத்தார்.
நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்த தகவலை அடுத்து, தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கு கொள்வது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை வார இறுதியில் வரும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை பற்றி, வரும்போதே தெரிந்துகொண்டுதான் வருவார். நிகழ்ச்சியின்போது அந்த வாரம் முழுவதும் நடந்தவற்றை பற்றி போட்டியாளர்களிடம் பேசி, இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பையும் கொடுப்பார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
இதேபோல் போட்டியாளர்கள் செய்த விஷயங்களை விமர்சிப்பார். அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவார். அவர்கள் செய்த நல்ல விஷயங்களை பாராட்டவும் செய்வார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரடி ஆடியன்ஸிடமும் அவ்வப்போது உரையாடல்களை நிகழ்த்தும் கமல்ஹாசன், வாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தக பரிந்துரைகளையும் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.