Vels Film International நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள திரைப்படம், 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தினை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ள நிலையில், நாயகனாக சிம்பு நடித்துள்ளார். AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, நடிகை ராதிகா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மக்கள் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகப் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ. அது போல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம் தான்.
தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்" என கூறி இருந்தார்.
தொடர்ந்து, கெளதம் வாசுதேவ் மேனன் குறித்து பேசிய கமல், "வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் என்னிடம் சொன்னார். ஆனால், இடையில் கொரோனா வந்து விட்டது. அது நிச்சயம் மீண்டும் நடக்கும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல், "வேல்ஸ் ஃப்லிம்ஸில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.