சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரை வாழ்த்தி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார்.
இதற்கு மத்தியில், கடந்த ஒரு சில தினங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், தன் மீது எழும் விமர்சனங்கள் குறித்தும் வாரிசு அரசியல் செய்வதாக எழுந்து வரும் கருத்துக்கள் குறித்தும் தனது விளக்கத்தை செய்தியாளர்களை சந்தித்த போது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதே போல, நடிகராகவும் தமிழ் சினிமாவில் இயங்கி வரும் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் தான் நடிகனாக தனது கடைசி படம் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி, கமல்ஹாசன் பகிர்ந்துள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக கமல்ஹாசன் பகிர்ந்த ட்வீட்டில், "வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது" என உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2022