நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதையாசரியர், பாடகர், பாடலாசிரியர், டான்சர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் கமலஹாசனை யாருக்குத்தான் பிடிக்காது.
அவருடைய ரசிகர்கள் உலகளாவிய முறையில் எங்கும் நிறைந்து கிடக்கின்றனர். அப்படி ஒரு ரசிகரை அவருடைய நோய்க் காலத்தில் மகிழ்ச்சி படுத்தி நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
இந்த நெகழ்ச்சி சம்பவம் நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம் திரைப்படத்தினை நிஜத்தில் பார்த்தது போல் இருக்கிறது. இதேபோல், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா என்னும் திரைப்படத்தில், தம்முடைய நண்பர் நோய் தொற்றினால் மனச்சோர்வு அடைந்திருக்கும் நிலையில் அவரை அந்த மனநிலையில் இருந்து வெளிக்கொண்டு வர ஆரோக்கியமான முறையில் பழகிப் பேசுவார். இத்தகைய பாங்குடைய கமல்ஹாசன் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் உண்மையான வாழ்க்கையிலும் அப்படி இருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
அந்தவகையில் உலக நாயகன் கமல்ஹாசன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம்முடைய ரசிகர் ஒருவரிடம் இணையவழி வீடியோ சந்திப்பில் பேசியிருக்கிறார்.
வெளிநாட்டில் வாழும் சாதிக் என்னும் உலகநாயகனுடைய ரசிகர் ஒருவர் மூளை புற்றுநோயால் பாதிப்படைந்து இருக்கிறார். ஆனால் கமல்ஹாசனுடன் பேச வேண்டும் என்கிற அவருடைய நீண்ட நாள் ஆசையை அறிந்த அவருடைய நண்பர்கள் தற்போது அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.
அதற்காக, கமல்ஹாசனுடன் இணையவழிச் சந்திப்பில் உரையாடுவதற்கு திடீரென்று ஒரு வீடியோ சந்திப்பை அவருடைய நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனை அறிந்ததும் சாதிக் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். அவருடன் பேசிய கமல்ஹாசன் அவருக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறார். கமல்ஹாசனுடன் சாகித் மகிழ்ச்சியுடனும் புது ஆற்றலுடனும் பேசும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பலரும் இதுபற்றி கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். உலகநாயகனின் இந்த நிகழ்ச்சி செயலை மக்களும் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கைகோர்க்கிறார். நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியதை அடுத்து அப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தை இயக்கத் தொடங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.