அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம்பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதன் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” திரைப்படத்தை, வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக, பான் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’.
இப்படத்தின் இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து கொண்டுள்ளார். மேலும், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் இணைகின்றனர்.
இது தொடர்பாக இயக்குனர் மணிரத்தினத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்களுடைய கேப்ஷனில், "இதைவிட பெரிய மற்றும் சிறப்பான ஒன்று இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் தளபதி படத்திலும், நடிகர் கமல்ஹாசன் நாயகன் படத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.