பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் 106 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் பிரதிநிதியாக பங்கேற்ற உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்து வரவிருக்கும் தமிழக தேர்தலில் பிஸியாக இருக்கிறார். மக்களை நேரடியாக சந்திப்பதும், பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும், கருத்து தெரிவிப்பதுமென தேர்தல் காலங்களில் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.
அதே போல் கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலைத் தடுக்க கடந்த வருடம் ஐந்து மாதங்களுக்கும் மேல் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு பலரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்பதை காணமுடிந்தது. இப்படி உலகையே நிலைகுலைய செய்த நோயாக சரித்திரத்தில் பதிக்கப்பட்டுள்ளது கொரோனா.
இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி எப்பொழுது வரும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், பரவி வரும் சில வதந்திகளால் மக்கள் சிலருக்கு தடுப்பூசிகள் மீது அச்சம் இருப்பதையும் காண முடிகிறது. எனவே தலைவர்கள் பலரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்களின் மனதில் இருக்கும் சந்தேகங்களுக்கும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் கூறுகையில் "ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.