"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம், கமல்ஹாசனின் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, ஐதராபாத் முன் வெளியீட்டு விழா, கோலாலம்பூர் நிகழ்ச்சி, மும்பை முன் வெளியீட்டு விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் ஜூன் 1 ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தினை விளம்பரப்படுத்த உள்ளார்.
ஏற்கனவே புர்ஜ் கலிஃபாவில் குரூப், 83 படங்களின் முன்னோட்ட விளம்பரங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது.