விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.
இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தினை அனைத்து வயதினரும் பார்க்கலாம் என்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் பெற்றோர்கள் மேற்பார்வையில் பார்க்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம், கமல்ஹாசனின் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.