தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.78 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, 14 மாதமே ஆன இந்த குழந்தையை இப்படி நடக்க ஓட விடுவார்கள் என நாங்கள் நம்பியதை விட அதிகம் கரிசனம் காட்டி, நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி.
நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் வறுமையை வெல்வது கடினம். மிகப் பெரிய பணப் புயலின் நடுவே நாங்கள் இந்த அளவுக்கு இலக்கை தொட்டதே பெரிய விஷயம்.
மத்திய அரசுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் தமிழ்நாடை இந்தியாவில் ஒரு பகுதியாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.என்றார்.
அப்போது அவரிடம் ஒரு நிருபர் மக்கள் உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. ஆனால் பிக்பாஸ், சினிமா என முழு நேர அரசியலில் இருந்து விலகிச் செல்கிறீர்களே ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், அரசியல் என் தொழில் அல்ல. அது தொழிலாக இருப்பது தவறு எனக் கருதும் கட்சி மக்கள் நீதி மய்யம். உங்களுக்காக நான் அரசியலை தொழிலாக ஆக்கிக் கொள்ளவில்லை. நான் எப்படி நேர்மையாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அப்படி சம்பாதிக்கிறேன்.