உலக நாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்வையும் சேர்த்து 3 நாட்கள் நிகழ்வாக கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன் படி நேற்று (நவம்பர் 7) தன் குடும்பத்தினருடன் பரமக்குடி சென்ற கமல்ஹாசன் தனது தந்தை D.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் தன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நிகழ்வின் 2 ஆம் நாளான இன்று தனது திரையுலக குருவான பாலசந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திறந்து வைத்தார். அப்போது உடன் வைரமுத்து, கே.பாலச்சந்திரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, மணிரத்னம், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், நாசர், ரமேஷ் அரவிந்த், இயக்குநர் சந்தான பாரதி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.