சென்னையில் தொடர் மழை காரணமாக தெருக்களில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி இருந்த நிலையில், அதனை பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன் பார்வையிட்டார்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கனமழை காரணமாக தத்தளிக்கும் வீடுகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து கள ஆய்வு செய்த கமல்ஹாசன் அங்கிருந்த மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
அத்துடன் அங்கு இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் நடிகர் கமல்ஹாசன் வழங்கி வருகிறார். குறிப்பாக குறிப்பிட்ட ஒரு பகுதியில் குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் சகிதம் மக்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், வெள்ளம் சூழ்ந்து இருப்பதை குறிப்பிட்டு, சென்னை மாநகராட்சிக்கு போன் செய்து கமல்ஹாசன் பேசினார்.
அதில், “ஹலோ.. நான் கமல்ஹாசன் பேசுகிறேன்!” என்று சொல்லி அப்பகுதியின் பிரச்சினையை சரி செய்ய சொல்லி கோரிக்கை வைக்கிறார். இதேபோல் ரசிகர்கள் அவரை தங்கள் வீட்டுக்குள் அழைத்து நாற்காலியில் அமரச் சொல்லி மகிழ்ந்தனர். இதேபோல் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் first glance வீடியோ அண்மையில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இதைத்தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5-லும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.