தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் கமல்ஹாசன் தம்முடைய ஆறாவது வயதில் நடிக்க தொடங்கி 230 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் நடிப்பது, இயக்குவது, கதை- வசனம்- பாடல்கள் எழுதுவது , பாடல் பாடுவது, திரைப்படங்களை தயாரிப்பது உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி பிக் பாஸ் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தம்முடைய 68வது பிறந்த நாளை சமீபத்தில் தான், நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தம்முடைய 234வது திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கக்கூடிய தகவல் அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியானது. இதனிடையே கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2-ஆம் பாகம் தயாராகி வருகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் பெருவெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர், உதவி இயக்குனர்கள், திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை கமல் வழங்கி இருந்தார்.
இந்த சூழலில்தான், நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இவைகுறித்த உண்மை தகவல்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நவம்பர் 23-ஆம் தேதி லேசான காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்டவற்றுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் தேடி வருகிறார் என்றும், ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.