கமல்ஹாசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசளித்தார். இந்த வாரம் விக்ரம் படம் இரண்டாவது வாரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த விக்ரம் படம், அமெரிக்காவில் மட்டும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் அமைந்துள்ளது.
தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்து இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார். இது குற்த்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (14-06-2022)முகாம் அலுவலகத்தில், நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி சந்தித்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் உடனிருந்தார்". என குறிப்பிடப்பட்டுள்ளது.