சென்னை எழும்பூர் மிடில்டன் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித், தெருகுரல் அறிவு உள்ளிட பலரும் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இயக்குனர் பா. ரஞ்சித், நேராக கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து பேசி இருந்த கமல்ஹாசன், "உறவே, உயிரே, தமிழே வணக்கம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை, தேவை. அரசியல் என்பது தனியாகவும் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.
என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி ஜாதி தான். 21 வயதாக இருக்கும் போது இருந்தே சொல்லி வருகிறேன். சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் உருவாக்கம் கடவுள். அந்த உருவாக்கம் நம்மையே தாக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கொடூரமான ஆயுதம் என்பது ஜாதி அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது அம்பேத்கர் வகுத்தது.
ஆனால் இது இன்றும் நடந்தபாடு இல்லை. இந்த தொடர் போராட்டத்தின் ஒரு நீட்சியாக தான் நீலம் பண்பாட்டு மையத்தை நான் பார்க்கிறேன். Spelling வேண்டுமானால் வேராக இருக்கலாம் ஆனால் மய்யமும் நீலமும் ஒன்றுதான். என்னையும் உங்களில் (நீலம்) ஒருவனாக சேர்த்துக் கொண்டதில் பெருமை" என தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners
இதே போல இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில், "புத்தகங்கள் தான் என்னை சினிமா நோக்கி நகர்த்தி சென்றது. புத்தகங்கள் படிக்கும்போது உலக ஆளுமைகள் மீது ஆர்வம் இயல்பாக வந்துவிடும். அப்படி ஒரு ஆளுமையாக தான் கமல்ஹாசனை பார்க்கிறேன். கமல்ஹாசனின் திரைப்படங்களை பிரித்தாலே சினிமாவின் வளர்ச்சியை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கமலின் எழுத்துப் பாணியை பார்த்து நான் வியக்கிறேன். வியாபார நோக்கத்தில் மட்டுமில்லாமல் ஒரு கலைஞனாக கலாச்சார இடைவெளியை சரியாக பயன்படுத்தியவர் கமல்ஹாசன்" என பேசினார்.