கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், கமலின் மகனாகவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி ஆகிய 3 பேரும் நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்து வருவதுடன் படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோயமுத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு கோயமுத்தூரில் உள்ள மாதம்பட்டி பக்சலாவில் நடைபெறுகிறது.
இதில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “விக்ரம் எங்க வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம், 2 வருடம் முன்பு கமல் சார் பர்த்டே விக்ரம் பட அறிவிப்பை தந்தோம்.. இந்த படம் பயங்கரமா இருக்கும்னு ஆடியோ விழாவில் சொன்னேன். அதை சாத்தியமாக்கிய ஆடியன்ஸ்க்கு நன்றி. கமல் சாரின் நுணுக்கமான நடிப்பை எஞ்சாய் செய்து பின்னணி இசை ஸ்கோர் செய்தோம். ஒருவர் என்னை உசுப்பேத்துவதற்காக கேரளாவில் ஒருவர் கமல் சார் என்ன கிஃப்ட் கொடுத்தார் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், விக்ரம் படமே எங்களுக்கு கிடைச்ச கிஃப்ட் தான் என்று சொன்னேன், நன்றி கமல் சார்.
நிறைய பேர் பின்னணி இசை டிராக்குகளை ரிலீஸ் பண்ண சொல்லி கேட்கிறார்கள். அதை ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.!” என்று குறிப்பிட்டதுடன் விக்ரமின் வெற்றிக்கு காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து தமது உரையை முடித்திருந்தார்.
இதேபோல் விஜய் சேதுபதியிடம், “விக்ரம் படத்தின் வெற்றிக்கு சந்தானம் கேரக்டருக்கும் பங்கு இருக்கு.. தயாரிப்பாளர் கமல் சார் இயக்குநருக்கு கார் கொடுத்தாரு. உதவி இயக்குநர்களுக்கு பைக் வாங்கி கொடுத்தாரு.. சூர்யாவுக்கு வாட்ச் கொடுத்தாரு.. சந்தானத்துக்கு கமல் சார் என்ன கிஃப்ட் கொடுத்தாரு?” என கேள்வி கேட்கப்பட்டபோது, விஜய் சேதுபதி அதற்கு, “கமல் சாரோட நடிக்குறதுக்கு வாய்ப்பு கொடுத்தாரு.. ஏங்க அது எவ்ளோ பெரிய விஷயம் அது.?” என்று கேட்டார்.