சீரியல் மூலம் பிரபலமான ராஜூ ஜெயமோகன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ஒரு முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.
கண்களை உருட்டி தனக்கே உரிய இயல்பான மற்றும் இன்னோவேட்டிவான பேச்சால் அனைவரையும் கலகலப்பூட்டும் ராஜூ சில நேரங்களில் மௌனமாக எதிரில் இருப்பவர்களை பேச விட்டு, தான் எதுவும் பேசாமலே கலாய்ப்பார்.
அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் எண்டர்டெயினராக திகழும் ராஜூ, கடந்த வாரம் சின்ன பொண்ணு, ஐக்கி பெர்ரி, தாமரை, அக்ஷரா, இமான், சிபி ஆகியோர் மத்தியில் செய்து காட்டிய மிமிக்கிரி அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், “ஒரு கலைஞனின் கலை வெளிப்படும் பொழுது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த கொண்டை ஊசி வளைவில் கவர்மெண்ட் பஸ் திரும்புவதை மிமிக்ரி செய்து காட்டினீர்கள். அது அற்புதமாக இருந்தது!” என்று குறிப்பிட்டார்.
மேலும் “அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் விகடகவியாக இருந்து நான் மிமிக்ரி செய்திருப்பேன். உங்க வயதுக்கு அது நியாபகம் இருக்காது. அதில் நான் செய்ததை விட நீங்கள் பண்ணியது நன்றாக இருந்தது!” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதுமே பாஸ் வீட்டுக்குள் இருந்த அனைவரும் உற்சாகமாக கைதட்ட, ராஜூ கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ந்து போனார்.