மத்திய அரசு அறிவித்துள்ள ஒளிபரப்பு திருத்த வரைவு மசோதா குறித்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’.S.தானு பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர், “ஒளிபரப்பு திருத்த வரைவு மசோதா நிறைவேறினால் படைப்பளிகள் மட்டும் அல்ல அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் முதல் பாதிப்பு ஏற்படும். ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் மூவரும் தான், தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த சட்டம் யாரை பழிவாங்க என்று தெரியவில்லை. இது அநியாயம், மாகாக்கொடுமை. வெளிநாடுகளில் திரைத்துறைக்கு மிகப்பெரிய சுதந்திரம் இருக்கிறது. நாட்டை ஆளக்கூடியவர்களையே நாடுகடத்தும் காட்சிகளை திரைப்படங்களில் வைக்கிறார்கள். நாம் அப்படி செய்வதில்லை. ஒரு நாட்டையே தவறாக சித்தரிக்கக்கூடிய படத்தை நாம் தடை செய்யலாம் அது தவறில்லை.
எங்கேயோ ஒரு மூளையில் அவ்வாறு தவறாக எடுக்கப்படும் படங்களை முறைபடுத்தி சரி செய்யவேண்டுமே தவிர, இப்படி ஒட்டுமொத்தமாக திரைத்துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவது அநியாயம். ஆனவன் ஆகாதவன்னு யாரோ ஒருவன் அளிக்கக்கூடிய புகாரை வைத்து படத்தை நிறுத்தி விட்டால் என்ன செய்வது.? வளர்ந்து வரும் ஒரு நடிகர் புதுப்படத்தில் நடிக்கும் போது அதற்கு எதிராக ஒருவர் புகார் அளித்து படத்தை தடை செய்தால் என்ன செய்ய முடியும்.?
திரையுலகத்தை அகல பாதாளத்தில் தள்ளக்கூடிய செயல் இது. எல்லா மத்திய அரசையும் தோளில் வைத்து கொண்டாடுகிறோம் நாங்கள். ஏன் இந்த திரைத்துறை மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. ஆகவே இதை மறுபரிசீலனை செய்து நாங்கள் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க வழி செய்ய வேண்டும். சென்சார் கண்டிப்பாக வேண்டும் தற்போது இருக்கக்கூடிய நெறிமுறைகளே போதுமானது; நியாயமானதும்கூட.
இதையே மத்திய அரசு பின்பற்றலாம். ஏற்கனவே திரையுலகினர் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார்கள். இது மேலும் திரையுலகினரை காணாமல் அடிக்கச்செய்யும். மத்திய அரசு இதனை, மறுபரிசீலனை செய்து பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் செப்டம்பர் - அக்டோபரில் வரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.