அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகி பெருவெற்றி பெற்ற மாபெரும் திரைப்படங்களான அசுரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
பல முன்னணி நடிகர்களை வைத்து பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த கலைப்புலி தாணு திரை உலகில் பரவலாக அறியப்படுபவர். இந்த நிலையில் அண்மைக் காலமாக கொரோனா இரண்டாம் அலை இந்தியா மட்டுமல்லாது தமிழகம் வரை பரவி வந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதனிடையே கொரோனா சூழலால் பொருளாதாரா ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் நிவாரணங்களை வழங்குவோர் தாமாக முன்வந்து வழங்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் ஸ்டாலினிடம் நிதி அளித்திருக்கின்றனர்.
அந்தவகையில் கலைப்புலி தாணு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவுகளும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலை நோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும் சந்ததிகளையும் தேக பலம் மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித்தரும். உங்கள் தர்மசிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்த படம் தேசிய விருது பெற்றது. இதனை அடுத்து, இந்தப் படம் தெலுங்கில் ‘நரப்பா’ என்கிற பெயரில் வெங்கடேஷ், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க ரீமேக் ஆகிறது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.