காதலும் கடந்து போகும் (2016) படம் வெளியாகி இன்றுடன் 6 வருடங்கள் ஆகிறது.
சூது கவ்வும் (2013) என்ற இமாலய வெற்றிக்கு பின் இயக்குனர் நலன் குமாரசாமி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் லியோ, தயாரிப்பாளர் சி.வி குமார் மற்றும் விஜய் சேதுபதி என்று 6 பேரும் மீண்டும் இணைந்த படம்.
சினிமாவில் த்ரில்லர், ஆக்சன் படங்களை விட ரொமாண்டிக், ஃபேமிலி டிராமா( Feel Good ) காமெடி டிராமா வகைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். நல்ல இசையும் நல்ல ஒளிப்பதிவும் அதற்கு முக்கிய காரணம். அப்படி சந்தோஷ் நாராயணன் இசையும், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் இந்த படத்திற்கு கூடுதல் பலம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் கதிரவனை விட மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் யாழினி தான் பிரதானமானதா இருக்கும். இந்த படத்தை ஒரு Women Centric படமுனும் சொல்லலாம். இப்போ வரை காதலும் கடந்து போகும்னு சொன்னா ட்க்குனு ஞாபகத்துக்கு வர ஆள் யாழினி தான்.
அதிலும் கோயில் காட்சி, இண்டர்வெல் காட்சி, Pre - கிளைமாக்ஸில் விசே வருவதற்காக வீட்டு வாசலில் காத்து கொண்டு இருக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சியில் மடோனா நடிப்பு அபாரமானது. கிளைமாக்ஸ் காட்சியில் மடோனா வெளிப்படுத்திய Subtle ஆன முகபாவனைகள் அவ்வளவு இயல்பானதாக இருக்கும்.
படம் முழுவதும் மடோனா செபாஸ்டியன் தான் நிறைந்திருப்பார். படம் வெளியான பொழுது பலர் குறையாக அல்லது ஏமாற்றமாக கூறியது கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் சேர்வது போல முடிக்கலயே என்று. ஆனால் இப்பொழுது பார்த்தாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியின் தாக்கத்தினால் தான் "காதலும் கடந்து போகும்" ஒரு கல்ட் கிளாசிக்.
என்னதான் 2010 ல வந்த மைடியர் டெஸ்பெரடோங்கிற கொரியன் பட ரீமேக். தமிழில் ரீமேக் பண்றதுக்கு முன்பே இந்தியில் ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி (2013) னு ஏற்கனவே ரீமேக் பண்ண படமா இருந்தாலும் அந்த படத்தை தமிழ் சூழலுக்கு ஏற்றார் போல திரைக்கதை அமைத்து இயக்கியது தான் நலன் குமாரசாமியோட வெற்றி.
இந்த படத்தின் ஒரிஜினல் கொரிய கதை 2008 உலக பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய விளைவுகளின் தாக்கத்தால் எழுதப்பட்டது. பின்னர் சில வருடங்களுக்கு பிறகும் அதே கதை முதலாளித்துவ வாழ்க்கை முறையால் இந்திய சூழலுக்கும் நன்கு பொருந்துகிறது.