''ராட்சசி படம் டிரெய்லர் வந்தவுடனே எல்லோரும் என்னை பெண் சமுத்திரகனி, சாட்டை படம் மாதிரியே இருக்கிறது என சமூக வலைதளங்களில் சொல்லியிருந்தார்கள். இந்தப்படம் கண்டிப்பாக காப்பி இல்லை'' என்று நடிகை ஜோதிகா தெரிவித்தார்.
ஜோதிகா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி. பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார்.
மிகச் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருந்தது. முழுக்க அரசுப்பள்ளியை கதை களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒரு அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அங்கு வரும் ஒரு பெண் ஆசிரியையும் சுற்றி நடக்கும் கதையாக இந்தப்படம் உள்ளது. டிரெய்லரும் அதையே சொன்னது
சமுத்திரகனி நடிப்பில் சில வருடங்கள் முன் வந்த சாட்டை படம் இதே கதையை மையமாக வைத்து வந்து வெற்றி பெற்ற படம். ராட்சசி டிரெய்லர் வந்தவுடனே எல்லோரும் இப்படம் சாட்டையை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என கூறிவந்தார்கள்.
ராட்சசி படத்தின் பத்திரிரைக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா இதை மறுத்து பேசினார். அவர் பேசுகையில், ''நான் இந்தப்படத்தை ஒத்துக்கொண்டதே இப்படம் சொல்ல வரும் விசயத்துக்காகத்தான். இந்தக்கதை அரசு பள்ளிகூடங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை மையப்படுத்தி படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட பார்வையை கொண்டிருந்தது.
இந்தப்படத்தின் டிரெய்லர் வந்தவுடனே எல்லோரும் என்னை பெண் சமுத்திரகனி, சாட்டை படம் மாதிரியே இருக்கிறது என சமூக வலைதளங்களில் சொல்லியிருந்தார்கள். நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. சூர்யா போனில் தான் பார்த்தேன். இந்தப்படம் கண்டிப்பாக காப்பி இல்லை. இந்தப்படத்தின் பார்வை வேறு. ஆனால் அப்படியே இது காப்பியாக இருந்தாலும் இந்த விசயத்தை பேச இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் எத்தனை படம் இந்த விசயத்தை பேசி வந்தாலும் நான் சந்தோஷப்படுவேன். இன்னும் இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும்'' என்று கூறினார்