எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு சேவையில் 5ஜி தொழில்நுட்பம் பெரிய அதிர்வை உண்டு பண்ணவிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் 5ஜி (5G)தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு, உயிர்களின் வாழ்வுக்கு தீங்கானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தப் படுவதற்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரபல இந்தி திரப்பட நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா (Juhi Chawla) வழக்குத் தொடர்ந்தார்.
அதில், 5 ஜி வயர்லெஸ் நெட்வொர்க்குகள் (5G wireless network) இந்தியாவில் அமைப்பதை எதிர்த்து அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் ஜூஹி சாவ்லா. இந்த வழக்கை தான் இன்று (ஜூன் 4) டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் இந்த மனுவில் வாதிகள் சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டதோடு நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோருக்கு தலா ரூ .20 லட்சம் அபராதம் விதித்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்டது போல் தெரிவதாகவும், இது தொடர்பான விசாரணையின் வீடியோ லிங்கை நடிகை ஜூஹி சாவ்லா சமூக ஊடகங்களில் பரப்பியதால், மூன்று முறை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட உயர்நீதி மன்றம் முன்னதாக உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்ட மூன்றாவது நபரை அடையாளம் கண்டுபிடிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இதனிடையே ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது ஜூஹி சாவ்லாவின் பிரபல திரைப்படங்களில் இருந்து, அந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து பாடல்களைப் பாடிக் கொண்டிருந்ததும், பின்னர் அவர் ஆன்லைன் இணைப்பில் இருந்து அகற்றப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.