தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடுத்திருந்த வழக்கில் ஜானி டெப் வெற்றிபெற்றதையடுத்து, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஆம்பர் அளித்திருக்கும் பதில்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Also Read | வழக்குல ஜானி டெப் ஜெயிக்க காரணமா இருந்த வழக்கறிஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.!
ஜானி டெப்
1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
வழக்கு
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
15 மில்லியன் டாலர்
இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னோக்கி செல்லவேண்டும்
வழக்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஜானி டெப்,"எனது மிகவும் பொக்கிஷமான, விசுவாசமான மற்றும் அசைக்க முடியாத ஆதரவாளர்கள் அனைவருக்கும். நாம் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருந்தோம். எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்த்தோம். நாம் ஒன்றாக ஒரே சாலையில் நடந்தோம். நீங்கள் அக்கறை கொண்டதால் நாம் சரியான ஒன்றை செய்தோம். இப்போது, நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறிச் செல்வோம். நீங்கள் எப்பொழுதும், எனது முதலாளிகள். மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வதைத் தவிர, நன்றியை வெளிப்படுத்த வழியின்றி திணறுகிறேன். எனவே, நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்பர் கொடுத்த ரிப்ளை
இந்நிலையில், ஜானி டெப்பின் பதிவுக்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலமாக பதிலளித்துள்ள ஆம்பர் ஹெர்ட்,"ஜானி டெப் முன்னோக்கிச் செல்கிறார் என்று சொல்வது போல், பெண்களின் உரிமைகள் பின்னோக்கி நகர்கின்றன. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்ப்பின் செய்தி என்னவென்றால், எழுந்து நின்று பேச பயப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் ஜானி டெப் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவர் போட்ட பதிவிற்கு, ஆம்பர் ஹெர்ட் பதிலளித்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | வாவ்… ரோலக்ஸ் கையில் ’Rolex’.. அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… viral pic