ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.
விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிபுரிந்துள்ளார்.
விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.
பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், விடுதலை திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்கள் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நாயகன் பொன்னியின் செல்வனை விட, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு அதிக கவனம் செல்வது போல விடுதலை திரைப்படத்திலும் கதாநாயகனாக சூரி இருந்தும் விஜய் சேதுபதி கேரக்டர் ஸ்கெட்ச் பண்ணுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டபோது பதில் அளித்த ஜெயமோகன், “சூரி வழக்கமாக கதாபாத்திரமாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இருப்பினும் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் என்று போட்டால் வணிக ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு இருக்குமா? அதே சூரி கதாநாயகனாக நடிக்கும் என்று போடும்பொழுது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரிக்குமா? எனவே எல்லா எழுத்தாளர்களும் அல்லது இயக்குனர்களும் அப்படி செய்ய மாட்டார்கள், சிலர் ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதும் பொழுது அதன் வழியே கிளை கதாபாத்திரத்தை அணுகுவார்கள், அந்த படைப்பு உருவாகக் கூடிய இடத்துக்குச் சென்று அதை இன்னும் டெவலப் செய்வார்கள் அப்படிதான் விஜய் சேதுபதி கேரக்டரை டெவலப் செய்து இருக்கிறார் வெற்றிமாறன்” என்று தெரிவித்தார்.