தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி தனது 30வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில், ஜெயம் ரவி புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'சைரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். யோகி பாபு காமெடியனாக இந்த படத்தில் நடிக்கிறார். செல்வக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராக பணிபுரிகிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை இயக்குகிறார். ஜெயம் ரவியின் அத்தை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ என்ற தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரபல இசையமைபபளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் அஹ்மத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.