நடிகர் சூர்யா & ஜோதிகா தயாரித்து அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை மையமாகக் கொண்டது.
இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாகவும், படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. இதனை அடுத்து குறிப்பிட்ட குறியீடுகள் படத்தில் மாற்றப்பட்டதுடன், பெயர் அரசியலுக்குள் படைப்புகளை சுருக்க வேண்டாம் என்று நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டார்.
இதனிடையே இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் , நடிகர் நாசர் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை என பலதரப்பில் இருந்தும் சூர்யாவுக்கு ஆதரவாகவும், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரிடம் சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்கும்படியான வேண்டுகோள் கடிதங்களும் வெளியாகின.
இன்னொருபுறம் திருமாவளவன், இந்திய மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில கட்சி மற்றும் இயக்க தலைவர்களும் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்பட விவகாரங்கள் தொடர்பாக நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கு தொடர் மிரட்டல்கள் வரும் நிலையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.