த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்து. இப்படம் குறித்து வெகுவாக பாராட்டிய சீமான், சூர்யா துணிச்சலாக பேசுவதாகவும், விஜய் அவ்வாறு பேசுவதில்லை என்றும் பேசியுள்ளார்.
சூர்யாவுடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில், 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையிலான திருட்டு கேஸ் என்கிற பெயரில் பிடித்துச் சென்று பொய் கேஸ் போட்டு காவல்துறையினர், மனித உரிமை அத்துமீறல் செய்கின்றனர். இதற்கான நீதியை, வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா போராடி பெற்றுத்தருவதாக கதை அமைந்துள்ளது. படம் அழுத்தமாகவும், வலுவானதாகவும் இருப்பதாக பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் அண்மையில் செய்தி பேட்டி ஒன்றில் பேசிய சீமான், “முல்லைப் பெரியாறு குறித்து பேச தமிழ் நடிகர்கள் இல்லை தானே. எல்லாரும் பயப்படுறாங்க. வனப்பாதுகாப்பு குறித்து தம்பி கார்த்தி தான் பேசுறாரு. புதியக் கல்விக்கொள்கை பற்றி தம்பி சூர்யா தான் பேசுராரு. அதுக்கு எவ்ளோ பேரு எதிர்ப்பு காட்டுறாங்க பாருங்க. வாயை மூடுங்க. பேசவே கூடாதான்னு நான் தான் குறுக்க போய் மல்லுக்கட்ட வேண்டியிருக்கு.
ஆனால், கேரள நடிகர்களுக்கு ஒரு பாதுகாப்பும், ஒற்றுமையும் இருக்கு. ஐயா பினராயி விஜயன், அணை உறுதியா இருக்கு, நடிகர்கள் தேவையில்லாம பேசி குழப்ப வேண்டாம், நடிகர்களாக இருந்தாலும் வழக்கு தொடர்வோம்னு சொல்ல, அறிக்கை கொடுக்க போன நானும் அவர் அப்படி சொன்னதால் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் இப்போது உச்சநீதிமன்ற வழக்கில் அரசே, அணை பலவீனமாக இருப்பதாக சொல்லிவிட்டது. இப்ப நான் தேனியில் போராட்டம் பண்ண வெண்டும்.
நம் நடிகர்கள் பேச பயப்படுகிறார்கள். வருமான வரி சோதனை போடுவார்கள், தியேட்டர் கிடைக்காது. என்னுடன் நடிக்கவும், என் படத்தை தயாரிக்கவும் பயப்படுகிறார்கள். கலைத்துறையாளர்களை என் அப்பா பாரதிராஜா அவர்கள் அழைப்பார். ஆனால் கார்த்தி, சூர்யா எல்லாம் அவர்களாகவே முன்வந்து பேசுகிறார்கள்.
ஜெய்பீம் படத்தை இயக்குநர் கெட்டிக்காரத் தனமாக எடுத்துள்ளார். ஆனால் சூர்யா தயாரிக்கணுமே? துணிந்து அதை செய்தார். தமிழில் இப்படி ஒரு படம் வருவது பெருமையாக இருக்கிறது. சூர்யா தவிர, இதையெல்லாம் யார் முயற்சி செய்வார்?” என்று பேசினார்.
பின்னர் “மற்ற நடிகர்கள் பேச தைரியம் இல்லையா?” என கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்திருந்த சீமான், “என் தம்பி விஜய் பேசலாம். துணிந்து பேசணும். சிலதை பேசிடுவான். ஆனால் அவன் பயப்படுவான். அவனுக்கு இருக்கும் உயரம் அவனுக்கே தெரியாது. இது உன் நாடு.. உன் நிலம்.. உன் சொந்தம்.. உன் மக்கள். என்னதுக்கு பயப்படணும்? விஜய்க்கே கார் வாங்கினதில் வந்த பிரச்சனைக்கு கூட நான் தான் மல்லுக்கட்டி வேண்டி இருந்தது. எதுக்கு பயப்படணும். அச்சப்படக் கூடாது.!” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நடிகர் விஜய்யும் வருமான வரி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதாகவும், அவர் சர்கார், கத்தி போன்ற பல அரசியல் பேசும் படங்களில் துணிச்சலாக நடித்துள்ளார் என்றும் சீமான் பேசியதை குறிப்பிட்டு இணையவாசிகள் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.