ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். சூர்யா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
தமிழகத்தில் 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேக திருட்டு கேஸில் பிடித்துச் சென்று காவல்துறை செய்யும் மனித உரிமை அத்துமீறலுக்கான நீதியை, வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, போராடி பெற்றுத்தருவதே படத்தின் கதை. காவல்துறையினரின் கொடூரமான விசாரணை, அதிகாரத்தால் நசுங்கும் எளிய மக்கள், சட்டத்தின் பவர் என அனைத்தையும் வலுவாக படமாக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெய்பீம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தில் ராஜாக்கண்ணு எனும் இருளர் இன இளைஞராக வரும் நடிகர் மணிகண்டன், போலீஸாரின் கஸ்டடியல் டார்ச்சருக்கு ஆளாவது போல் தமது அழுத்தமான நடிப்பை உடல், மொழி, உணர்ச்சி என எல்லா விதத்திலும் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள மணிகண்டன், “ஒருவர் உடல் ரீதியாக தாக்கப்படுவதை, பொதுவாக சினிமாக்களில் காண முடியும். ஆனால் கஸ்டடியல் டார்ச்சர் என்று சொல்லப்படக்கூடிய காவல்நிலைய துன்புறுத்தல்களை உண்மையில் அப்படி வாழ்ந்த, ஒருவருடைய வலியை அப்படியே கடத்த வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியமானது. அந்த கேரக்டரில் நடிக்கும் நமக்கு கட் சொன்னால், நிறுத்தி விடலாம். அதன் பிறகு டீ, காபி கொடுப்பார்கள். பேக்கப் சொன்னால் போய் விடலாம்.
ஆனால் உண்மையில் அந்த சம்பவத்தில் வாழ்ந்து, வலியை அனுபவித்த அவருக்கு அது அப்படி அல்ல. ஒரிஜினல் ராஜாக்கண்ணுவுக்கு என்ன நடந்தது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அது ரொம்ப கொடூரம். அதில் ஒரு பத்து சதவீதத்தையாவது திரையில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் விஷயம். எனக்கும் சில நேரங்களில் உடல் வலிக்கும். அப்போதெல்லாம் ராஜாக்கண்ணுவை நினைத்து பாருங்கள் என்று இயக்குனர் சொல்வார். உடனே மீண்டும் நடிக்க தயாராகி விடுவோம்!” என்பது போல் பேசி இருக்கிறார்.
சில்லுக்கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த மணிகண்டன், முன்னதாக மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பிலான விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனம் எழுதியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மணிகண்டன் பேசும் முழு பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.