இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்ற முனைவரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், இசையமைப்பாளரும், நாயகனுமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிகை கஷ்மிரா பர்தேசி, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே, கணேஷ் பேசுகையில், “ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவில் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். இந்த படத்திற்கு ‘P T சார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பி. டி. சாரை அனைவருக்கும் பிடிக்கும். இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தை பெறவிருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார். அதனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி, இனி டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி என அழைக்கப்படுவார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.