பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று 18 போட்டியாளர்கள் இணைந்தனர். அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் 17 போட்டியாளர்கள் வலம் வந்த நிலையில், முதல் எலிமினேஷன் ரவுண்ட் வந்தது. அதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறினார் நாடியா சாங். மலேசிய தமிழரான இவர் சீனாவை சேர்ந்த சாங் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து தன்னுடைய தாயாரின் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாக நாடியா குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேகமாக நாடியா பேட்டி அளித்திருக்கிறார்.
அவரை 'Fatman' ரவீந்தர் நேர்காணல் செய்திருக்கிறார். அப்போது இசைவாணி குறித்து கேட்ட ரவீந்தர், “இசைவாணியை பொருத்தவரை, யாருடனும் பழக கூடாது என்பதற்காகவே தள்ளி ஒதுங்கி நின்று விட்டு என்னிடம் யாரும் பழகவில்லை என்று கூறுகிறாரா? இல்லை.. இசைவாணி எல்லோரிடமும் நெருங்கி பழகும் அளவுக்கு அவருக்கு அந்த வீட்டில் யாரும் இடம்கொடுக்க மாட்டேன் என்கிறார்களா?” என்று கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன நாடியா, “என்னைக் கேட்டால் அவரே (இசைவாணி) ஒதுங்கி போகிறார் என்று சொல்வேன். அவருக்கு அட்வைஸ் என்று கிடையாது .. ஆனால் அவரிடம் நிறைய முறை ஒரு விஷயம் சொல்லி இருக்கிறேன். பல இடங்களில் அவர் ஏதாவது பாடல் பாடினால், நிறைய பேர் அவரை இடைமறித்து, ‘நீ எல்லாம் ஏன் பாடுற?’ என்பதுபோல் கலாய்ப்பார்கள். அந்த இடத்தில் அவர் மன வலிக்கு ஆளாவார். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்.
அப்போது நான் அவரிடம் சொல்வேன். உங்களுக்கு பாட மிகவும் பிடிக்கும் என்றால் பாடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயம் செய்து கொண்டிருந்தால், அதை ஒருவர் இடைமறித்தால், நீங்கள் இன்னும் உங்கள் குரலை அதிகப்படுத்தி பாடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி இருந்தும் அவர் யாராவது ஏதாவது சொன்னால் எழுந்து போய் விடுவார்.
எனவே இதை யாரும் வெளியில் இருந்து செய்வதாக எனக்கு தெரியவில்லை. அவரே தனக்கு தானே மனவலிக்கு உள்ளாக்கி கொள்வார். சிலசமயங்களில் மிகவும் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடன் இருப்பார். சிலசமயம் அவரே மனம் உடைந்து போவார். என்னிடம் வந்து சொல்வார் எனக்கு அவரைப் பார்க்கும் பொழுது அந்நியன் போல் இருக்கும். இப்போ இப்படி பேசுகிறார், அப்போ இப்படி பேசுகிறாரே? என்று தோன்றும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்