அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.
சுமார் 50 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் சாத்தியப்படாமல் இருந்த, பொன்னியின் செல்வன் நாவலை திரையில் கொண்டுவந்துள்ள இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வம் நாவலை வாசிக்காதவர்களுக்கானதா? நாவல் வாசகர்களுக்கானதா? யாருக்கு நன்றாக புரியும் என்பது குறித்த கேள்விக்கு பிஹைட்வுட்ஸின் பிரத்தியேக நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
அதில், “நான் ஒரு கதை சொல்ல வந்திருக்கேன், கல்கி சார் நாவலில் சொன்ன கதையைம் நான் சினிமாவில் சொல்ல வந்திருக்கேன், இது பாக்குறவங்க, புத்தகத்தை படித்திருந்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி, புரியணும். அதுதான் என்னுடைய வேலை. ஆக, கதை சொன்ன விதத்தில் எல்லாமே புரியுற மாதிரிதான் எடுத்திருக்கிறோம். கூடுதல் ஹோம் வொர்க் பண்ணிவிட்டு வர வேண்டும் என்றில்லை.
ஆனால் ஹோம் வொர்க் பண்ணுவதில் என்ன அட்வாண்டேஜ் என்றால், இதுமட்டுமில்லாமல், புத்தகம் & படத்தை தாண்டி சோழநாட்டை பற்றியும், அந்த அரசர்கள் பற்றியும் ஒரு பிடிப்பு கிடைக்கும். கல்கி பண்ணியதிலேயே பெரிய விஷயம், ஒரு புனைவுக்கதையில் அத்தனை விவரங்கள், வரலாறு, வாழ்க்கை முறை ஆகியவற்றை வைத்துள்ளார். அதையும் படத்தில் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறோம்.
இந்த படம் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஒரு அறிமுகம் தான். நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என்பதை விட, படத்தை பார்த்துவிட்டும் நாவலை படித்து சோழர்கள், அந்த கலாச்சாரம் , வாழ்வியலை புரிந்துகொள்ள முயலலாம். நான் பள்ளி காலத்தில் இந்த நாவலை முதலில் படித்தேன். அனைத்து கேரக்டர்களும் நம்மை கவர்ந்துவிடும். ” என்றார் இயக்குநர் மணிரத்னம்.