சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்னாவில் வசிக்கும் அவரது சகோதரர் ஒருவர் வடநாட்டு செய்தி சேனலான இந்தியா டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் கூறுகையில் "இந்த வருடம் நவம்பர் மாதம் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்து வைத்திருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என்று வேதனையுடன் கூறியுள்ளார். மும்பையில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் விழாவை ஒழுங்கு செய்ய இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் அவர் எந்த பெண்ணின் பெயரையும் வெளியிடவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட்டை மணக்கோலத்தில் பார்க்க காத்திருந்த குடும்பத்தார், இப்படி அவரை பார்த்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான முடிவை எடுக்க காத்திருந்த இளம் நடிகர் கடைசியில், ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தான் அனைவரின் கேள்வியாய் இருக்கிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.