அஜித் மற்றும் நடிகை தேவயானி நடித்து வெளிவந்த திரைப்படம் காதல் கோட்டை. இந்த படத்துக்கு பிறகு ராஜஸ்தானில் மலர்ந்துள்ள மற்றொரு காதல் கதை கேட்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்தாராவுக்கு உட்பட்ட ஜெய்சால்மர் கிராமம். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த கிராமத்தை பலரும் பேய் கிராமம் என கூறுகின்றனர். இதற்குக் காரணம் இந்த கிராமத்தில் மக்கள் இல்லாதது தான். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த கிராமத்தில் பேரிடர், பேய்கள் இருப்பதாக கூறப்பட்ட வதந்தி, ஏதோ ஒரு சாபம் என மக்களின் மூடநம்பிக்கை, வறட்சி என வெவ்வேறு காரணங்களால் மக்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் இந்த கிராமத்தில் இன்னும் இருந்து வருகிறார். அவர்தான் இந்த கிராமத்தின் கேட் கீப்பர் என அழைக்கப்படும் பாதுகாவலர்.
இப்போது 82 வயதான இந்த தாத்தா, 1970ஆம் ஆண்டில் முப்பது வயதில் இருக்கும் போது தங்கியிருந்த அதே பகுதியில் டூரிஸ்ட் கைடாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெரினா என்ற பெண்மணி 5 நாள் சுற்றுப்பயணமாக ஜெய்சால்மர் கிராமம் வந்திருந்தார். மெரினாவுக்கு ஒட்டக சவாரி செய்வது எப்படி என்று கற்று தந்தார் டூரிஸ்ட் கைடு. ஆனால் அவருக்கு மெரினாவை பார்த்தவுடன் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்து விட்டது.
மெரினாவுக்கும் இதே ஃபீலிங் தான். இப்படி ஒரு 5 நாள் இருவரும் அன்புடன் நெஞ்சம் கலந்துவிட்டனர். 5 நாளில் பயணம் முடிந்து ஆஸ்திரேலியா செல்லும் முன்னர் மெரினா, இந்த டூரிஸ்ட் ஐ லவ் யூ என்று கூறி தன் காதலை வெளிப்படுத்த, டூரிஸ்ட் கைடோ உறைந்து போய்விட்டார். காரணம் இன்ப அதிர்ச்சி தான். அவருக்குள்ளும் அதே எண்ணம் தானே. பின்னர் மெரினா ஆஸ்திரேலியா சென்ற பிறகு இருவருக்கும் இடையே காதல் கோட்டை படம் போலவே காதல் கடிதம் ஒரு பாலமாக செயல்பட்டது.
இருவரும் நலம் நலமறிய ஆவல் என்கிற ரீதியில் கொஞ்ச நாள் வாழ்ந்துகொண்டு வந்திருந்தனர். அதன் பிறகு அந்த டூரிஸ்ட் கைடுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெரினா, தாத்தாவை ஆஸ்திரேலியா வரச்சொல்லி கூறியிருந்தார். உடனே நண்பர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் சொல்லாமல் ஆஸ்திரேலியா சென்றார்.
அங்கு 3 மாதங்கள் மெரினாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை அவர் இன்றும் மறக்கவில்லை. பின்னர் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் தங்கிவிடலாம் என்று மெரினா கூற, ஆனால் தன் குடும்பத்தை பிரிய மனமில்லாமல் மெரினாவை புரிந்த டூரிஸ்ட் கைடு, இந்தியா திரும்பியதும் வேறொரு பெண்ணை மணந்துகொண்டு குல்தாராவின் கேட் கீப்பராக பணிபுரியத் தொடங்கினார்.
இப்போது 2 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட, தாத்தா தனிமையில் வாடியிருந்தார். அப்போது மீண்டும் ஆஸ்திரேலிய காதலி மெரினாவிடமிருந்து காதல் கடிதம் ஒன்று வர, தாத்தாவின் வாழ்வில் வசந்தம் வீசியுள்ளது. அத்துடன் மெரினா தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் விரைவில் இந்தியா வருவதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தன் முதல் காதலியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் கேட் கீப்பர் தாத்தா. நிச்சயம் மெரினா தாத்தாவை சந்தித்தவுடன் கேட்கும் முதல் கேள்வி, ‘நலம், நலமறிய ஆவல்’ என்பதாகத்தான் இருக்கும்.