பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
தமிழில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி போலவே, பாலிவுட்டில் 90களில் ஆஷிக்கி (1990), சாஜன் (1991), பர்தேஸ் (1997), ராஜா ஹிந்துஸ்தானி (1996) உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற இரட்டை இசையமைப்பாளர்கள் நதீம் சைஃபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட்.
‘பர்தேஸி பர்தேஸி’, ‘தோ தில் மில் ரஹி ஹே’ உள்ளிட்ட பாடல்கள் நதீம் - ஷ்ரவன் இசையில் இன்றுவரை ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன. பின்னர் 2000ஆம் ஆண்டு உடைந்த இவர்களது கூட்டணி மீண்டும் 2009ல் டு ‘டு நாட் டிஸ்டர்ப்’ படத்திற்காக இணைந்தது.
இந்நிலையில் இவர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட் கடந்த திங்கள் (ஏப்.19) அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Our Music community and your fans will miss you immensely #ShravanRathod ji Rest in peace 🌺Respect and Prayers🌹🇮🇳
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) April 22, 2021
ஆயினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு (ஏப்.22) ஷ்ரவன் ரத்தோட் உயிரிழந்தார். ஷ்ரவன் ரத்தோட் மறைவுக்கு பிரபல பாலிவுட் மற்றும் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.