செய்தி வாசிப்பாளராக பரீட்சையமான நடிகை பிரியா பவானி ஷங்கர், 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். 'மேயாத மான்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்', எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து 'மான்ஸ்டர்', அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஃபியா' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தற்போது அவர், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2', எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 'பொம்மை', ஹரிஷ் கல்யாணுடன் 'ஓ மணப்பெண்ணே', தெலுங்கில் 'அஹம் பிரம்மாஸ்மி' என அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், ''அந்த குழந்தையின் முகம்! இனி கொரோனாவோடு வாழ நாம் பழகிக்குவோம். சரி! இந்த குழந்தையின் முகம் நமக்குள்ளே தரும் குற்ற உணர்ச்சியும் பழகிடுமா? இந்த நவீன உலகத்தில் சீக்கிரமே மருந்தோ, vaccination கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. ஆனால் நடந்து தேயும் தொழிலாளியின் கண்ணீர் கறையை எதை கொண்டும் மறைக்க முடியாது. “அவங்கள யாரு தண்டவாளத்துல படுக்க சொன்னது?”
“பேசிகிட்டு இருக்காம மூட்டை முடிச்சிய தூக்கிட்டு நடக்க உதவுங்க” போன்ற அதிகார குரல்கள் நம் நிதர்சனத்தை காட்டிக்கொண்டே இருக்கும். பால்கனி கைதட்டல்களும், ஹெலிகாப்டர் பூ மழையும் எதுக்கு? தனித்து தெருவில் விடப்பட்டவர்களுக்கு வேடிக்கையா?
தனித்து விடப்பட்ட ஒரு மாபொரும் கூட்டத்தின் கண்ணீருக்கும் ரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்? அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை - குறள். அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.